டியூசனுக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவனை பாலியல் வலையில் வீழ்த்திய கணித ஆசிரியை
- தேவியின் லீலைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
- ஆசிரியர்-மாணவர் உறவு பாதிப்படையாமல் இருக்க எப்போதும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி கற்பித்தலில் ஈடுபடவேண்டும்.
திருச்சி:
ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த அறத்தை துறந்து, அவமானத்தை அடையாளமாக்க முயற்சித்து இருக்கிறார் ஆசிரியை ஒருவர். திருச்சியில் கணக்கு சொல்லி தரும் ஆசிரியை தமது மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையே அதிகம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். மாணவனை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே அவனை வழி தவற செய்துள்ள விபரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவி (வயது 40). அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியையான இவர் வி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதி நாமக்கல்லில் அரசு பணியில் உள்ளார்.
இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியையும், அவரது கணவரும் பிரிந்தனர். ஆசிரியை குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிலும், கணவர் நாமக் கல்லிலும் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆசிரியை தேவி தமது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் டியூசன் எடுத்து வந்துள்ளார். இதில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஒருவரை பெற்றோர் அவரிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த மாணவன் தேவி பணியாற்றும் பள்ளியில் படித்து வந்தான்.
கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று வந்த காரணத்தால் மகனை தேவியிடம் அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் அந்த மாணவன் அந்த ஆசிரியை வீட்டுக்கு சென்று விடுவான். பின்னர் இரவு 9 மணி வரை ஆசிரியர் வீட்டில் இருந் துள்ளான்.
நீண்ட நேரம் டியூசன் படித்து வந்த காரணத்தால் மகன் கணிதத்தில் நன்றாக தேறி சதம் எடுப்பான் என அவனது பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அவன் சரிந்த கதை தெரிந்தது. ஆசிரியையிடம் வெகு நேரம் மகன் படிக்கவில்லை, அவர் மகனுக்கு பலான பாடம் எடுத்துக் வந்துள்ளார் என்பதை அறிந்து நிலை குலைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில மாதங்களாக அந்த மாணவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருக்காமல் தேவி வீட்டில் மணி கணக்கில் இருந்து வந்துள்ளான். மேலும் இரவு நேரங்களில் செல்போனில் மூழ்கி இருந்தான். நள்ளிரவு 12 மணி வரை ஆசிரியையிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான்.
இது அவனது பெற்றோருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மாணவனை பெற்றோர்கள் கண்காணிக்க தொடங்கினர். இதில் தேவியின் லீலைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள் மாணவரிடம் விசாரித்தனர். அப்போது ஆசிரியை தேவி அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆசிரியை தேவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த மாணவர் குழந்தைகள் நிலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கைதான தேவி தமது வகுப்பில் படிக்கும் வேறு மாணவர்களுக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சக மாணவர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வீட்டில் 2 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, டியூசன் படிக்க வந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உலகிற்கு உரக்க எடுத்துச் சொல்லி இருக்கிறது.
ஆசிரியர்-மாணவர் உறவு பாதிப்படையாமல் இருக்க எப்போதும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி கற்பத்தலில் ஈடுபடவேண்டும். தங்களது விருப்பு, வெறுப்புகளை மாணவர்கள் மீது ஒருபோதும் ஆசிரியர்கள் திணிக்கக்கூடாது. மாணவர்களின் அறிவீனத்தை அழித்து, அறிவாளியாக்கும் பணி ஒன்றையே முக்கியமாக கருதவேண்டும் என்பது நியதி.
ஆனால் கணவரை பிரிந்து, இணையத்தில் மூழ்கி, மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டு வகுப்பறை கல்வியை படுக்கை அறையுடன் பகிர்ந்துகொண்ட ஆசிரியை ஒருவர் இன்று சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.