தமிழ்நாடு (Tamil Nadu)

வாகன சோதனையில் சிக்கினர்- லாரியில் கனிம வளம் கடத்திய டிரைவர்கள் 2 பேர் கைது

Published On 2022-09-15 08:00 GMT   |   Update On 2022-09-15 08:00 GMT
  • விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • லாரி உரிமையாளரான ஞானதிரவியம் எம்.பி.யின் மகன் தினகரனை தேடி வருகின்றனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரிகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் எந்தவித அனுமதியின்றி கிராவல் மண் (கனிம வளம்) கேரளாவிற்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கனரக லாரியை ஓட்டி வந்த அம்பை தாலுகா புலவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28) மற்றும் சங்கரன்கோவில் தாலுகா சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் (42) ஆகியோரை பழவூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

மேலும் 2 கனரக லாரிகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். விசாரணையில் அந்த 2 லாரிகளும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரமேஷ், ஜெயபாலன் மற்றும் லாரிகளின் உரிமையாளர் தினகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளரான ஞானதிரவியம் எம்.பி.யின் மகன் தினகரனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News