தமிழ்நாடு

மதுசூதனன் பிராஜாப்தி - கியானந்த பிரதாப் கவுத்

ரெயில் என்ஜின் மோதி 2 வடமாநில தொழிலாளர்கள் பலி

Published On 2024-07-11 02:44 GMT   |   Update On 2024-07-11 02:44 GMT
  • மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர்.
  • தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார்.

மதுரை:

மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் பிராஜாப்தி (வயது 30), கியானந்த பிரதாப் கவுத் (22) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர்.

இந்தநிலையில் மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர். இதனால், அவர்கள் புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில், மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News