தமிழ்நாடு

வாகன சோதனையில் வேனில் கடத்தி வந்த 2 டன் குட்கா பொருட்கள் சிக்கியது: டிரைவர் கைது

Published On 2024-01-31 08:39 GMT   |   Update On 2024-01-31 08:39 GMT
  • சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
  • சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி:

கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு வாகனம், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு தருமபுரி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

இதன்காரணமாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், இளமதி ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையி்ல் புதிய ரவுண்டனா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மைசூருவில் இருந்து வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடகா மாநிலம் மைசூரு சி.வி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுல்லா செரிப் (50) என்பவர் மைசூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பானுசுஜதா, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த சம்பவம் போலீசாரால் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News