அப்பாசாமி ரியல் எஸ்டேட் சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு
- காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது.
- எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.