உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 17 பக்தர்கள் விமானம் மூலம் இன்று சென்னை வருகை
- நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
- மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
கடலூர்:
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். ரெயில் மூலம் 13 சிதம்பரம் பக்தர்கள் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் கனகராஜ் (வயது 61), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 24 பேரும், சீர்காழியை சேர்ந்த 2 பேரும் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா செல்ல கடந்த 1-ந் தேதி டெல்லிக்கு சென்றனர்.
அப்போது அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த 2 பேரும், பெங்களூருவில் வேலைபார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த 2 பேரும் ஆன்மிக பயணத்தில் இணைந்து கொண்டனர். பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் 3-ந் தேதி புறப்பட்டு இமயமலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடந்த 9-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இதனால் 30 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். பின்னர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், 30 பேரும் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
இதில் கோயம்புத்தூரை சேர்ந்த 2 பேர், பெங்களூரை சேர்ந்த 2 பேர் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த 13 பேர் உள்ள மொத்தம் 17 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கோவை, பெங்களூரை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விமானத்தில் வந்த சிதம்பரம் பக்தர்கள் 13 பேர் சென்னையில் இருந்து 2 வேன்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
மற்ற 13 பேர் இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை வந்தடைகிறார்கள். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்து செல்கிறார்.
மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.