குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலந்த மர்ம நபர் யார்?
- குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
- மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் அதே புதுக்கோட்டையில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெருவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.
இங்கிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திடீரென வயிறு வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இப்படி அடுத்தடுத்து பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ எனக் கருதிய அப்பகுதி இளைஞர்கள், தண்ணீர் தொட்டிக்கு மேலே ஏறிப் பார்த்துள்ளனர்.
அப்போது தொட்டிக்குள் மாட்டுசாணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாட்டுசாணம் தானா என உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.