விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி
- அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
- விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.
போரூர்:
விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.
இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெற்றது.
கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக குவிந்து இருந்தனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 2 ½ வயது முதல் 3½வயது வரை உள்ள மழலை குழந்தைககள் பெற்றோரின் மடியில் அமரவைக்கப்பட்டு நெல் மற்றும் அரிசியில் "அ" எழுத்தை எழுதி கல்வியை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தாலும் எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக அய்யப்பன் கோவிலில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வடபழனி கோவிலில் காலை 7.30மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.
திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீ மகாவல்லப கணபதி கோவிலில் வித்யா ரம்பம் நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது