அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
- பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தொகுதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பிரபு கடந்த 2016-21-ல் பதவி வகித்தார். இவரது தந்தை அய்யப்பா அ.தி.மு.க.வின் தியாகதுருகம் முன்னாள் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் தையல்நாயகி அய்யப்பா தியாகதுருகம் ஒன்றியத்தின் முன்னாள் சேர்மனாக பதவி வகித்தார். இதில் பிரபு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பல்வேறு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் இணைந்து போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் தியாகதுருகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவரது பெற்றோர் வசிக்கும் அய்யப்பா வீடு மற்றும் பிரபுவின் நெருங்கிய உறவினர்கள் வீடு, அவரது தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பிரபுவின் தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.