விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு?
- விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது.
- மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.
இதையொட்டி கட்சியின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சித் தலைவர் விஜய் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனைகளை செயல்படுத்தி வருகிறார்.
விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி பிரபல அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்துவதற்கு விஜய் திட்ட மிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாநாடு நடத்து வதற்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொண்டர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்சியில் மாநாடு நடத்துவது அனைத்து மாவட்டத்தினருக்கும் பொதுவாக இருப்பதால் பெரும்பாலான தொண்டர்கள் திருச்சியில் மாநாடு நடத்த வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 'சாலை' என்ற ஊரில் பல ஏக்கர் பரப்பளவில் காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையொட்டி மாநாடு மைதானத்தை கட்சி முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.