தமிழ்நாடு

விஜயகாந்த் பிறந்தநாள் நாளை கொண்டாட்டம்

Published On 2024-08-24 09:22 GMT   |   Update On 2024-08-24 09:22 GMT
  • விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
  • விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி மறைந்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோவில் போன்ற தோற்றத்தை உருவாக்கி கேப்டன் கோவில் என்றே கட்சியினர் அழைத்து வருகிறார்கள்.

விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. யார் சந்திக்க வந்தாலும் அவர்களை நன்றாக சாப்பிட வைத்து விட்டே விஜயகாந்த் பேச தொடங்குவார். இப்படி அவர் பசியாற்றியதை நினைவு கூறும் வகையிலேயே கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாகவே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாள் நாளை (25-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. விஜயகாந்த்தின் மரணத்துக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கட்சியினர் கனத்த இதயத்துடனேயே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாள் அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.

இந்த ஆண்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா செய்து வருகிறார். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் பிறந்தநாளை கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த்திற்கு நாளை சிலை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மார்பளவு மற்றும் முழு உருவசிலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த இரண்டில் ஒரு சிலை நாளை நிறுவப்பட உள்ளது.

சென்னை மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன், இ.ஆர்.எஸ்.பிரபாகரன், எஸ்.கே.மாறன், செந்தில் குமார் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் ஆகியோரும் தங்களது பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

Tags:    

Similar News