தமிழ்நாடு (Tamil Nadu)

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் 19-வது ஆண்டாக தீபாவளியை கொண்டாடிய கிராம மக்கள்

Published On 2022-10-25 05:26 GMT   |   Update On 2022-10-25 05:26 GMT
  • ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது.
  • தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம்.

சென்னிமலை:

தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பட்டாசு தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். ஆனால் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கிராம மக்கள் பறவைகளுக்காக கடந்த 19 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்து பகுதியில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இந்த பறவைகளை கண்டு களிப்பதற்காக ஈரோடு மட்டுமன்றி சேலம். கோவை, நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பறவை சரணாலயத்தை சுற்றி வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன் கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர் கருக்கங்காடு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடிப்பதால் இங்கு உள்ள பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் இந்த பகுதி மக்கள் ஒன்று கூடி தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 19-வது ஆண்டாக நேற்றும் இந்த கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

பறவைகள் சரணாலயம் அருகில் உள்ளதால் தீபாவளி பண்டிகையை வெடி வெடிக்காமல் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி கடந்த 19 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகிறோம். இதற்கு எங்கள் பகுதி குழந்தைகள், இளைஞர்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். பறவை இனங்கள் எப்போதும் அமைதியை விரும்பும் இனமாகும். இதனால் நாங்கள் வெடி வெடிப்பதில்லை.

தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News