பார்வையிழந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த தன்னார்வலர்கள்
- 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார்.
- பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியில் வசித்து வருபவர் மருதம்மாள் (வயது 75). கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும், தனது 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில் மிகவும் சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வருவதை கண்ட சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, மருதம்மாள் மூதாட்டிக்கு வீட்டை கட்டித்தர முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன் மூலம் உண்மை நிலையை கண்டறிந்து, உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் ராணுவதுறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ரெயில்வேத்துறை, மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்தனர்.
இந்த வீட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரையை சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை இணை ஆணையர் தேவநாதன், அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வர் ஐசக், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் விசுவாசம், மாறவர்மன், சி.ஐ.எஸ்.எப். போலீஸ் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்கள் குமார், சரவணன், தினேஷ், சகாய பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மூதாட்டி மருதம்மாளுக்கு உணவு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் பால்தாமஸ் நன்றி தெரிவித்தார்.