வக்பு வாரிய சட்ட திருத்தத்தால் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள்- குஷ்பு கருத்து
- எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
- சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-
சமூகத்தில் சீர்திருத்தம் வரவேண்டும் என்று பேசிக் கொண்டே சீர்திருத்தத்தை தடுப்பதுதான் சிலரது வேலை. அதற்கு மதத்தையும், சாதியையும் கேடயமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இஸ்லாமியர்களிடம் 'முத்தலாக்' முறையை மதத்தின் பெயரால் வைத்து கொண்டு பெண்களை அடிமையாக வைத்திருக்கிறார்கள். எந்த சமூகத்திலும் பெண்கள் முன்னேறினால் தான் உண்மையான முன்னேற்றம் வரும்.
முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் அந்த அடிமை நிலையில் இருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டனர். சொத்து மீதான உரிமை கிடைத்துள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்தத்தையும் இமாம்களுடன் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இத்தனை வருடங்களாக சுற்றி சுற்றி எந்த மாற்றத்தையும் காணாத நிலையில் இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது.
இதை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடி எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை கொண்டவர்கள். மதத்தை தாண்டி சீர்திருத்தத்தை பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.
எதிர்க்கும் அரசியல் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்களிப்பது மதத்தையும், சாதியையும் காப்பதற்கு அல்ல. வேலை வாய்ப்பு வேண்டும். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வேண்டும், சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.
மதங்களை சொல்லி காட்டி மக்களின் உணர்வுகளை மறைக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடிக்கும் தி.மு.க. தனது மந்திரி சபையில் எத்தனை இஸ்லாமியர்களுக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளது? அவர்களுடைய சிறுபான்மை நாடகத்தை கேட்டும், பார்த்தும் மக்கள் சலித்து போனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.