தமிழ்நாடு

அய்யம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டில் சீறிய காளைகளுடன் மல்லு கட்டிய வீரர்கள்

Published On 2024-02-18 05:26 GMT   |   Update On 2024-02-18 05:26 GMT
  • கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
  • காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.

இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News