தமிழ்நாடு

பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 64 சதவீதமாக அதிகரிப்பு

Published On 2023-07-19 06:40 GMT   |   Update On 2023-07-19 06:40 GMT
  • கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் தற்போது 2082 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2235 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 89 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2347 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன. அடியில் 377 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7130 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.

Tags:    

Similar News