அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
- நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை.
- சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று 5 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து மலைப்பகுதியில் மழை குறைய தொடங்கியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 2318 அடியாக குறைந்தது.
நேற்று அணை நீர்மட்டம் 110.85 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 112.80 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது. மணி முத்தாறு அணை நீர் இருப்பு 73 அடியில் நீடிக்கிறது. இன்று காலை வரை பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் அடித்தது. களக்காடு மலையடிவார பகுதிகளில் பெய்த மழையால் தலையணையில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் விட்டு விட்டு பெய்கிறது. ராதாபுரம், வள்ளியூர், பணகுடி பகுதிகளில் நேற்று இரவில் சிறிது நேரம் சாரல் அடித்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷண நிலை இருப்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடையம் அருகே அமைந்துள்ள ராமநதி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 82 அடியை எட்டிவிட்டதால் பாதுகாப்பு கருதி நேற்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த அணைக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 88 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை வரை அந்த அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா அணை பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 601 கனஅடி நீர் தண்ணீர் வந்ததால், இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து அந்த அணை நீர்மட்டம் 69.30 அடியை எட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி அதிகரித்து 109.50 அடியை எட்டியுள்ளது. மழை குறைந்துவிட்டாலும் மாவட்டங்களில் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் தென்காசியில் 3.2 மில்லிட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்ச மாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.