தமிழ்நாடு

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து டிச.26 வரை தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2023-12-12 05:29 GMT   |   Update On 2023-12-12 05:29 GMT
  • 5 மாவட்டங்களில் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
  • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது.

இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகையாற்றில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் டிசம்பர் 11-ந்தேதிசிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 2-க்கு வைகையாற்றில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

வருகிற 4-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தம் 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனையடுத்து டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி 3-க்கு 1304 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். டிசம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 1-க்கு மொத்தம் 229 மி.கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகையாற்றில் நேற்றுமுதல் வருகிற 13-ந்தேதி வரை விநாடிக்கு 2000 கனஅடியும், 14-ந்தேதி விநாடிக்கு 1180 கனஅடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி விநாடிக்கு 3000 கனஅடியும், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விநாடிக்கு 2300 கனஅடிவீதமும், டிசம்பர் 20-ந்தேதி விநாடிக்கு 1120 கனஅடிவீதமும், தண்ணீர் திறக்கப்படும்.

மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக 22-ந்தேதி விநாடிக்கு 600 கனஅடியும், 23-ந்தேதி விநாடிக்கு 565 கனஅடியும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விநாடிக்கு 500 கனஅடியும், 26-ந்தேதி விநாடிக்கு 400 கனஅடிவீதமும் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 136.15 அடியாக உள்ளது. வரத்து 1248 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, இருப்பு 6156 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் சோத்துப்பாறை அணையின்நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மழையளவு குறைந்தபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 40-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Tags:    

Similar News