விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை... போலீஸ் அதிகாரி தகவல்
- விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
- விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.
இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்டமான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் மாநாட்டை நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 28-ந் தேதி அன்று மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விஜய் மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி உள்ளதா? மாநாட்டுக்கு அனுமதி அளித்தால் போக்குவரத்து பாதிக்கப்படுமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்தனர்.
விஜய் மாநாட்டுக்கு 1½ லட்சம் பேர் வர வாய்ப்புள்ளதாக அனுமதி கேட்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதைவிட அதிகம் பேர் வருவதற்கே வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். அதே நேரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இடத்தை தேர்வு செய்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதனால் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற காரணங்களால் விக்கிரவாண்டியில் விஜய் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்பட்டுள்ள மனுவை பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பழனியிடம் கேட்ட போது, அதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.
விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இடத்தையும் சுத்தம் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு நடத்தப்படவில்லை.
இதுபோன்ற சூழலில்தான் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் நிச்சயம் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.