தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பாக பயணம்: மெட்ரோ ரெயிலில் இன்று முதல் 'இளஞ்சிவப்பு' பாதுகாப்பு படை

Published On 2024-02-15 06:18 GMT   |   Update On 2024-02-15 09:04 GMT
  • மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
  • தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.

ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News