தமிழ்நாடு (Tamil Nadu)

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம்- வீடு வீடாக விண்ணப்பம் வழங்க 20 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு

Published On 2023-07-12 09:52 GMT   |   Update On 2023-07-12 09:52 GMT
  • இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
  • 500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த தொகையை பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது.

இந்த நிபந்தனை மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது. இதற்காக 8 வகை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குதான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இது தவிர தாமாக முன்வந்து பணியாற்றும் நபர்களையும், நலச்சங்க நிர்வாகிகளையும் இதில் ஈடுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக எந்தெந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்துவது, எந்தெந்த மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவது என்பது பற்றிய அறிவிப்பும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News