தமிழ்நாடு (Tamil Nadu)

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு: தர்மபுரியில் 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

Published On 2023-07-22 04:49 GMT   |   Update On 2023-07-22 06:08 GMT
  • குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி:

தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை மறுநாள் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தொப்பூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதற்கட்டமாக நடைபெறும் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கணினியில் பதிவு செய்வதை பார்வையிடுகிறார். அங்கேயே மகளிர் குழுவினருடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்துகிறார்.

அதன் பின்னர், அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் முதலமைச்சர் பேசுகிறார்.

பின்னர், மீண்டும் ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்று, சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News