தமிழ்நாடு (Tamil Nadu)

மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் 1,500 சிறப்பு முகாம்களில் 'பயோ மெட்ரிக்' மூலம் பெயர் பதிவு

Published On 2023-07-24 05:58 GMT   |   Update On 2023-07-24 09:32 GMT
  • சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 98 வார்டுகளுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
  • அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன் கடைகளுக்கு 3 முதல் 5 முகாம்கள் வரை ஒரே இடத்தில் நடக்கிறது.

சென்னை:

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த 20-ந்தேதி முதல் 4 நாட்கள் வழங்கப்பட்டன.

அந்தந்த ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு படிவத்துடன் எந்த நாளில் சிறப்பு முகாமிற்கு வர வேண்டும் என்பது குறித்த டோக்கனும் வழங்கப்பட்டன.

சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 98 வார்டுகளுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 1,428 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் முதலில் 703 கடைகளுக்கு உட்பட்ட 1,500 இடங்களில் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.

விண்ணப்பங்கள் எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை எடுத்து தயார்படுத்தி வைத்திருந்தனர். தகுதி வாய்ந்த பெண்கள் டோக்கன்களில் குறிப்பிட்டு உள்ள நாட்களில் முகாமிற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

குடும்பத் தலைவிகள் வரும்போது ஆதார் எண், ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித நகலும் இணைக்கத் தேவையில்லை.

குடும்ப அட்டைக்கு ஒரு முகாம் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன் கடைகளுக்கு 3 முதல் 5 முகாம்கள் வரை ஒரே இடத்தில் நடக்கிறது.

காலை 8 மணிக்கே முகாம்களுக்கு பெண்கள் வரத் தொடங்கினார்கள். முகாம்களில் கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் பயோமெட்ரிக் கருவியுடன் தயாராக இருந்தனர்.

பெண்களுக்கு உதவி செய்ய மையங்களும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசல் இல்லாமல் பதிவு செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

முகாமிற்கு வந்த பெண்களின் ஆதார் எண் முதலில் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமையாதவர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

ஒரு குடும்பத்தில் தகுதி உள்ள பல பெண்கள் இருந்தாலும் ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்த முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெரிசல் இல்லாமல் வரிசையில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையும் இந்த முகாம்கள் செயல்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை ரேஷன் கார்டு வாரியாக பெண்கள் அழைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 எனும் தொலைபேசி எண். 94454 77205 எனும் வாட்ஸ் அப் எண் மற்றும் 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தாங்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News