தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: பெண்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி பணமோசடி

Published On 2023-11-03 09:00 GMT   |   Update On 2023-11-03 09:00 GMT
  • பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
  • போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

திருப்பூர்:

பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செய்வதற்கென உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) கடந்த ஜூலை மாதம் 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5, 12, 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னணு வழி ரசீது உருவாக்க ப்படவேண்டும் என 2018ம் ஆண்டு முதல் சட்டம் அமலுக்கு வந்தது.

இதையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இதனிடையே போலி ஜி.எஸ்.டி., பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது.

இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இந்த போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போது தான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது.

மேலும் ஜிஎஸ்டி., கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிமைத்தொகையை அரசு வழங்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி இணை இயக்குநர் முருககுமாரிடம் கேட்டபோது, திருப்பூரில், போலி ஜி.எஸ்.டி., மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. எத்தனை பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு இல்லாமல் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை வழங்கியது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை ரத்து செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News