திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
- சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
- பைக்கை பறிமுதல் செய்த போலீசார் துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கப்பள்ளி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் அவிநாசி, திருமுருகன்பூண்டியை சேர்ந்த துரைராஜ் (23) என்பதும், பெருமாநல்லுாரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவர் தனது பைக்கில் அபாயகரமாக பைபாஸ் ரோட்டில் ஓட்டி சென்று, அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.