மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை- ஆயுதங்களுடன் வாலிபர் கைது
- சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.