இரும்பு திருடிய வாலிபர் கொலை- கும்பலாக சேர்ந்து தாக்கிய 8 பேர் சிக்கினர்
- ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
- காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொது பணித்துறை என்ஜினீயர்கள் கட்டுமான தொழிலாளர்களை கொண்டு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஷாயின்ஷா காதர் (23), வினோத் (20), ஹேமநாதன் (20) ஆகிய 3 வாலிபர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் அங்கு இரும்புகளை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து விட்டனர்.
அப்போது வாலிபர் ஹேமநாதன் தப்பி ஓடி விட்டார். ஷாயின்ஷா காதரும், வினோத்தும் மாட்டிக்கொண்டனர்.
அங்கிருந்த என்ஜினீயர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர் சேர்ந்து ஷாயின்ஷா காதரையும், வினோத்தையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் ஷாயின்ஷா காதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வினோத்தும் காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் பற்றி விசாரித்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.
ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் நாங்களே வந்து அழைத்துச் செல்கிறோம் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து ஷாயின்ஷா காதர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஷாயின்ஷா காதரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடி தலைமறைவான இவர்களது கூட்டாளி ஹேமநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலை சம்பவம் சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.