தமிழ்நாடு

கார் மோதி 5 பெண்கள் உயிரிழப்பு- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Published On 2024-11-27 12:57 GMT   |   Update On 2024-11-27 12:57 GMT
  • ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
  • கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில், இருவரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே கார் மோதி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆந்தாயி (71), லோகம்மாள் (வயது 56), யசோதா (54), விஜயா (53), கௌரி (52) ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News