6 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ். இடங்கள் வீணானது- 20 மாணவர்களுக்கு ஓராண்டு தடை
- சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.
- நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனா். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாகி உள்ளன.
இதேபோன்று, கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவா் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.
இதனால் நடப்பாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவா்களில் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பி.டி.எஸ். ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை. இதையடுத்து அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில மாணவா்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவா்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.