நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18-ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
சிறப்புத் திட்டத் தகுதிக்காக விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்பட மாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சில நடைமுறைகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன், தனியார் நிலங்களை ஒட்டியுள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த விதிகளின்படி அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நீர்நிலைகளின் எண்ணிக்கை மற்றும் பாசனப் பரப்பு குறைந்து வரும் நிலையில், இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்போதுள்ள குறைந்த அளவிலான நீர்நிலைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடும். இதை அனுமதிக்க முடியாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.
தமிழ்நாட்டின் இன்றையத் தேவை பாசனப் பரப்பை அதிகரிப்பது தான். அதற்கான புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கும் நீர்நிலைகளையும் தாரை வார்க்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.