தமிழ்நாடு

முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது

Published On 2025-02-02 11:13 IST   |   Update On 2025-02-02 11:13:00 IST
  • கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது.
  • ‘தட்கல்’ டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை:

இன்று மங்களகரமான முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வீடு, நிலம் வாங்கு பவர்கள் நல்ல நாள் பார்த்து பததிரப்பதிவு செய்வதால் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால், இன்றைய நாளில் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்களுக்காக பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் காலையில் இருந்தே கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இது தவிர 'தட்கல்' டோக்கனும் கொடுக்கப்பட்டது.

இன்று விடுமுறை நாளில் பத்திரப்பதிவு நடைபெற்றதால் ஒவ்வொரு ஆவணப்பதிவுக்கும் கூடுதல் கட்டணமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்பட்டது. இன்று பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

நாளையும் (3-ந்தேதி) மங்களகரமான நாள் என்பதால் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடை பெறும் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 'தட்கல்' டோக்கன்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று பத்திரப்பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.

2024-25-ம் நிதியாண்டில் கடந்தாண்டு டிசம்பர் 5-ந் தேதி ஒரே நாளில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் பதிவுத் துறையில் ஈட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜனவரி 31-ந்தேதி 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் 2-வது முறையாக அரசுக்கு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. இப்போது இன்றும், நாளையும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News