தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
- நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி , நெல்லையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழையால், கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் கொட்டாரம் பகுதியில் 16 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.
மழை நீர் புகுந்த வீடுகளை ஆய்வு செய்து உடனடியாக நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.