தமிழ்நாடு

திருவொற்றியூரில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி 15 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு

Published On 2024-11-13 07:23 GMT   |   Update On 2024-11-13 07:23 GMT
  • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர்.
  • 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.

திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள விக்டரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 25-ந் தேதியும், மீண்டும் கடந்த 4-ந்தேதியும் என 2 முறை ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் மாணவிகளுக்கு மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி 100 மணி நேரம் கண்காணித்தனர். இதில் கடந்த 4-ந் தேதி மாணவிகளுக்கு இடைவேளை விட்டநேரத்தில் 10.40 மணி முதல் 10.50 மணிவரை ரசாயன கசிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது. இதனால் பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.

அதன் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ. இப்ராஹிம் தலைமையில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில் மாணவர்களின் பெற்றோருடன் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவத்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதால் உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதக்கூடிய பத்தாம் வகுப்பு, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்பு மாணவிகளுக்கு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News