தீபாவளி பண்டிகை- கோவையில் இருந்து டெல்லி, மும்பைக்கு பறந்த 3 டன் இனிப்பு வகைகள்
- விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது.
- பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 30 விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதந்தோறும் சராசரியாக 2.8 லட்சம் பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.
இந்த விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 936 டன் சரக்குகள் கையாளப்பட்டன. அதேபோல ஜூலையில் 1079 டன், ஆகஸ்டு மாதத்தில் 1239 டன் என்ற அளவில் சரக்குகள் கையாளப்பட்டன. அதாவது கோவை விமான நிலையத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 100 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கோவையில் இருந்து விமானம் வாயிலாக 3 டன் இனிப்பு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 டன்களுக்கும் அதிகமான இனிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக உணவுப்பொருட்கள்தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.