சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழைப் பதிவு
- சென்னையில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
- திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் ஃபெஞ்சல் புயல் நகர்ந்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை எண்ணூரில் இன்று சில மணிநேரங்களில்13 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கத்திவாக்கத்தில்12 செ.மீ. மழையும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழையும் மணலி சென்னை சென்ட்ரலில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.