தமிழ்நாடு

கனமழை காரணமாக கோபி பச்சைமலை முருகன் கோவில் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு

Published On 2024-11-07 05:07 GMT   |   Update On 2024-11-07 05:07 GMT
  • கோவிலுக்கு மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் செல்லலாம்.
  • கோபி போலீசார் மலைப்பாதையாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் செல்லலாம்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பச்சைமலை மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே கிழக்கு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

தற்போது கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் தினமும் மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் வந்து செல்கின்றனர்.

அதே சமயம் பச்சை மலையில் இன்று சூரசம்ஹாரம், நாளை திருக்கல்யாண உற்சவம் என்பதால் மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் வருவார்கள். தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். அதுகுறித்து மலை அடிவாரத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு காலை முதலே பச்சைமலை கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். கோபி போலீசார் மலைப்பாதையாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், சூரசம்ஹாரம் விழாவுக்கு பின் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி சீரமைக்கப்படும். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால் பக்தர்கள் அவ்வழியே வாகனங்களில் பணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News