குரூப்-2 காலி பணியிடங்கள் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
- குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு.
- இதன் மூலம் கூடுதலாக 213 பேர் குரூப்-2, 2 ஏ பணியிடங்களில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் அடங்கும்.
இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுப வர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்பார்த்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப்-2 தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.