எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
- எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!"
"இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் ஏமாற்ற எவ்வளவு தைரியம்? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.