சென்னை கொளத்தூர் அரசுப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
- மாணவர்களுக்கு உணவு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
- 2 வருடம் கழித்து 234-வது தொகுதியாக கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்திருக்கிறேன்.
சென்னை:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியாக சென்று பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்து வருகிறார். 234-வது தொகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று ஆய்வு செய்தார்.
கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம். காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினமான இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஏஐ தொழில் நுட்பத்தின் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு பயணத்தை 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மேற்கொண்டேன். 2 வருடம் கழித்து 234-வது தொகுதியாக கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்திருக்கிறேன்.
இன்று குழந்தைகள் தினத்தில் ஆய்வை முடிப்பது போல் தானாகவே அமைந்துள்ளது. 234 தொகுதிகளிலும் பயணம் செய்தது பல்வேறு அனுபவங்களை எனக்கு வழங்கி உள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் 5 வருடங்களில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட திட்டமிட்டோம்.
இதில் காம்பவுண்ட் சுவர், ஆய்வகம், கழிவறை ஆகியவையும் அடங்கும். இதுவரை 7,756 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6,353 வகுப்பறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர் கண்காணிப்பு காரணமாக இதை கட்டி முடித்துள்ளோம்.
அரசு பள்ளியை நோக்கி நிறைய பேர் வரும் போது கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கேற்ப வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.