இபிஎஸ்-க்கு வேறு வேலை இல்லை- அமைச்சர் சேகர்பாபு
- மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.
- இன்று நடந்த திருமணங்கள் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ரூ.1 லட்சம் என்ற செலவில் 21 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளோம்.
சென்னை:
இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை குறித்த கேள்விக்கு, களத்திலே ஆட்சியும், கட்சியும் ஒருங்கிணைந்து கைகோர்த்து பெருமளவு வெள்ளத்தை சமாளிப்போம். மக்கள் துயரத்தை துடைப்போம் என்று கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலைப்படாமல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுகிறார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அறிவிப்பு வெளியிடும்போது கேட்டுக்கொண்டது விளம்பர பதாகைகள் வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். எழை எளிய மக்களுக்கு வறுமைக்கோட்டுக்கீழே உள்ள மக்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார். அந்தவகையில் இன்று நடந்த திருமணங்கள் கூட கட்டணம் இல்லாமல் ஒரு ஜோடிக்கு ரூ.1 லட்சம் என்ற செலவில் 21 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளோம். எது எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ளமுடியும். பார்ப்பவர் கண்ணிலே கோளாறு என்றால் யார் என்ன செய்யமுடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். எங்கள் தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் என்றார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை என்று ராமதாஸ் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் (மு.க.ஸ்டாலின்) மிசாவை சந்தித்தது 22 வயதில். 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலிலேயே அவர் கால் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்ற அளவிற்கு மக்களின் துயரை துடைப்பதற்கு அல்லும், பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கிற ஒரு உத்தம தலைவர் இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் இருக்கிறார் என்றால் அதுவும் முதன்மையான தலைவர் இருக்கிறார் என்றால் பத்திரிக்கை உலகம் சிறந்த முதலமைச்சர்களிலே பத்தில் ஒருவராக அவரை தேர்வு செய்திருக்கிறது என்றால் அவருடைய திறமைக்கும், ஆற்றலுக்கும், மனிதாபிமானத்துக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டு. ராமதாஸ் எந்த ஊரிலே இருக்கிறார் என்பதே தெரியவில்லை என்றார்.