ஐயப்பன் பாடல் விவகாரம்- இசைவாணி மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
- ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.
- பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய நிகழ்ச்சியில், கானா பாடகி இசைவாணி பங்கேற்றார். அப்போது அவர், சபரிமலை ஐயப்பசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலா தேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆட்சியை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்பவர் நம்முடைய முதல்வர்.
எந்த மதத்தினரை இழிவுபடுத்துவதையும், ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.
ஐயப்பன் பாடல் விவகாரம் தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளதாக பத்திரிகை வாயிலான அறிந்து கொண்டேன்.
சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல. அனைரும் சமம் என்பது தான் இந்த ஆட்சியின் கொள்கை. அதே நேரத்தில் சட்டத்தை மதிக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. சட்டப்படி இந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
டைரக்டர் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய பேச்சின் ஒலிநாடாவை தருகிறேன். கடந்த ஆண்டு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் தங்கர் பச்சான் புகழ்ந்த புகழ் இதுவரையில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருக்கிற பேச்சாளர்கள் கூட பேசி இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு புகழ்ந்தவர். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.