மக்கள் தொடர் ஆதரவால் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பு- மு.க.ஸ்டாலின்
- 2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன்.
- கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை சென்றார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்தினார்.
நேற்றைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரவு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.
இன்று 2-வது நாளாக அவர் தனது கள ஆய்வை தொடர்ந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் எந்தளவு முடிந்துள்ளது. இன்னும் என்னென்ன பணிகள் எஞ்சியுள்ளன என கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோவை காந்திபுரம் திறந்த வெளி சிறைச்சா லையின் ஒரு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கோவையில் அமைய உள்ள நூலகத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கோவையில் இங்கு குழுமியுள்ள மாணவ செல்வங்களை சந்திக்கும்போது எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, ஆற்றலை ஏற்படுத்தி உள்ளது. சில மாதத்துக்கு முன்பு தமிழ்புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தேன். இன்று நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்சசி பெருமையடைகிறேன்.
2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன். கோவைக்கு 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போது மாவட்டத்திற்கான திட்டங்களை தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.
2023 தொடக்கத்தில் அந்த திட்டங்கள் நிலை குறித்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை கூட்டம் நடத்தி கடந்த 3 ஆண்டுகளில் நாம் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொன்னேன். நான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் சென்றேன். அதை முடித்து அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்தி கொண்டிருந்தேன்.
மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி நான் தொடங்கிய பயணத்தில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுத்தது இந்த கோவை மாவட்டத்தை தான். நேற்று காலை இங்கு வந்ததில் இருந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டுள்ளேன். அதில் ஒரு கட்டமாக மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது சிறப்பான வேகமான செயல்பாட்டை பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார். கோவைக்காக சிறப்பாக செயல்பட வந்திருக்கிறார். அது உறுதி.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக தான் மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தோம். பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோன்று கோவையிலும் கலைஞர் பெயரிலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். அடுத்த ஆலோசனையில் அறிவியல் மையமும் அமைக்கலாம் கருத்துக்கள் வந்தது.
அது வந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது தந்தை பெரியார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கு. அதனால் கோவையில் அவர்கள் 2 பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.
தொண்டு செய்து பழுத்த பழம் தான் தந்தை பெரியார். 80 ஆண்டுகளுக்கு முன்பே வரும் உலகம் எப்படி இருக்கும் என கனவு கண்ட பகுத்தறிவு ஆசான். இந்த இளைய சமுதாயம் வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக மிக சிறப்பாக அமைய உள்ளதை மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.
அடிக்கல்நாட்டு விழாவில் இந்த நூலகத்தின் திறப்பு விழா தேதியையும் அறிவிக்கிறேன். 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தநூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசு சொன்னதை செய்யும். கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தேன்.
கோவையின் அடையாளமாக மாற உள்ள செம்மொழி பூங்கா பணிகளையும் பார்வையிட்டுள்ளேன். ரூ.133 கோடி மதிப்பில் நடக்கும் அந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் அது திறக்கப்பட உள்ளது.
தி.மு.க ஆட்சியில் திட்டத்தை அறிவித்தால் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு திறந்து வைப்போம். உயர்தர சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம். அந்த வரிசையில் இந்த பெரியார் நூலகம் இடம் பெற போகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்படட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன். இது 35 ஆண்டு கால பிரச்சனை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிரசாரத்துக்கு வந்தபோது என்னிடம் மனு கொடுத்தனர். நான் அமைச்சர் முத்துசாமியிடம் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என சொன்னேன். நேற்று மட்டும் 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் அந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும், மக்களுக்கும் தேவையான திட்டங்கள் என்ன. வட்டார மக்களின் எதிர்பார்ப்பு என்ன என அறிந்து அந்த திட்டங்களை செயல்படுத்துகிறோம். என்னை பொறுத்தவரை ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளையும் மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தனி மனித கவலையையும் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களால் மக்களுக்கு நன்மை செய்கிறோம்.
மக்களின் வாழ்க்கையோடு, திராவிட மாடல் அரசு இரண்டற கலந்துள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் மக்கள் நம்மை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது தான் நம்மை பலரும் விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மக்களுக்கான எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம்.
இன்றைக்கும் நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. எங்களுக்கு ஒரு மிஷன் இருக்கும். அதனை செயல்படுத்துவதற்காக மிஷன் தான் ஆட்சி அதிகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள். இப்போது அதே வடமாநிலத்தோடு, தமிழ்நாட்டை ஒப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கே புரியும்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம். அதிக நகரமயமான மாநிலம். ஐ.நாவின் வளர்ச்சி இலக்கை செயல்படுத்துவதில் முதல் மாநிலம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழகத்தில் தான் உள்ளது. தொழிற்சாலைகள் குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டது தமிழ்நாடு தான். தெற்காசியாவில் சுற்றுலாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு.
வறுமையின்மை, பட்டினி விழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர், வேலை வாய்ப்பு, குறைந்த விலைவாசி, பொருளாதார குறியீடு, தொழில், அமைதி, உற்பத்தி என எந்த புள்ளி விவரத்தை எடுத்தாலும் தமிழகம் தான் முன்னணி மாநிலமாக இருக்கும்.
இதுசாதாரணமாக நடக்கவில்லை. கொள்கையும், லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வை, செயல்திட்டங்கள் கொண்ட மக்களுக்கான அரசை நடத்துவதால் இது சாத்தியமாயிற்று. இதை இன்னும் எளிதில் சொல்ல வேண்டும் என்றால், இந்த இயக்கத்தை தொடங்கும்போது பேரறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார். ஆனால் இன்றைக்கு நாங்கள் தெற்கை வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் வடக்கிற்கும் தெற்கு தான் வாரி வழங்குகிறது. அது தான் உண்மை நிலை. அதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்த வரை கோட்டையில் இருந்து பணியாற்றுவது இல்லாமல் களத்தில் பணியாற்றுபவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
வரலாற்றில் நிலைத்து இருக்க கூடிய திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையும், பணியும் ஏராளம் இருக்கிறது. உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். அது எங்களை வேலை செய்ய தூண்டும். ஆகவே உங்களுக்காக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்திபுரத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரும் பதிலுக்கு மக்களை பார்த்து கைகூப்பி வணங்கியும், கைகளை அசைத்தபடியும் சென்றார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ. சாமிநாதன், கயல் விழி செல்வராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், கணபதி ராஜ்குமார் எம்.பி., கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.