தமிழ்நாடு

முகூர்த்த நாள்... கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் கடும் அவதி

Published On 2025-02-02 11:24 IST   |   Update On 2025-02-02 11:24:00 IST
  • அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதம்.
  • கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாததால் பயணிகள் தவிப்பு.

சென்னை:

கோயம்பேட்டில் இருந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்ட பிறகு பயணிகள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் கூடுகிறார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் பெறலாம். பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

முகூர்த்த நாளான இன்று தமிழகம் முழுவதும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் பலர் தங்களது குடும்பத்தினரோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு திரண்டனர்.

இதுபோன்று அதிக அளவில் கூடிய பொது மக்கள் தங்களுக்கு தேவையான பேருந்து கிடைக்காததால் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இதை தொடர்ந்து பஸ்நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் அங்கு நீடித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.

முகூர்த்த நாளை கணக்கில் கொண்டு வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது பயணிகள் தவிப்புக்கு உள்ளானதற்கு காரணமாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

எனவே வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News