தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மழை- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

Published On 2025-03-11 12:02 IST   |   Update On 2025-03-11 12:02:00 IST
  • இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்.
  • படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் பெய்த மழையின் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

இன்று அதிகாலை சூரியன் உதயம் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தும் காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதனால் படகுத் துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையின் காரணமாக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து உள்ளது.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி பாலம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழை காரணமாக கன்னியாகுமரி கடற்கரை மட்டும் இன்றி அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News