தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் 1039-வது சதயவிழா பந்தல்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

ராஜராஜ சோழன் 1039-வது சதய விழா: பந்தல்கால் நடும் முகூர்த்தம் இன்று நடைபெற்றது

Published On 2024-11-01 06:48 GMT   |   Update On 2024-11-01 06:48 GMT
  • மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
  • விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும்.

தஞ்சாவூா்:

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை, அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

இதனையொட்டி, பெரியகோவிலில் இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தக்காலுக்கு பால், மஞ்சள், தயிர், திரவிய பொடி உள்பட பல்வேறு வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், தமிழர் வெற்றி பேரவை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும். மேலும் பல்வேறு கட்சி, இயக்கம், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்த 2 நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும் நடைபெறவுள்ளன. 

Tags:    

Similar News