தமிழ்நாடு

தக்கலையில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது

Published On 2024-10-24 06:48 GMT   |   Update On 2024-10-24 06:48 GMT
  • உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை:

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் உள்ள ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

இவர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில்களில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 20-ந் தேதி இரவு இதில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் செயலாளர் அனூஸ் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்தது தெரிய வந்தது. அவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் பள்ளியாடி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் எடுத்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர், கோவில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் கேமராவில் சிக்கிய உருவம் போல் இருந்ததால் அதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

இதில், அவன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடித்தவன் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் பள்ளியாடியை சேர்ந்த தங்கமணி என்ற ஜேம்ஸ் என தெரியவந்தது.

இதேபோல் 10 நாட்களுக்கு முன்பு கன்னிமூல கணபதி கோவிலில் நடைபெற்ற உண்டியல் கொள்ளை சம்பவத்திலும் தங்க மணி தான் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.

இந்த 2 சம்பவங்களிலும் தான் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவன் வாக்குமூலம் கொடுத்து உள்ளான். இவன் மீது ஏற்கனவே 4 உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News