தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு

Published On 2025-01-02 11:35 IST   |   Update On 2025-01-02 11:35:00 IST
  • இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
  • கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.

சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.


Full View


Tags:    

Similar News