தமிழ்நாடு

வெயிலின் பாதிப்பை தடுக்க வண்டலூர் பூங்காவில் விலங்குகள்- பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடு

Published On 2025-03-07 14:37 IST   |   Update On 2025-03-07 14:37:00 IST
  • மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • யானைக்கு ஷவர் குளிர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

வண்டலூர்:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சென்னையில் வழக்கத்திற்கு மாறாக தற்போது இயல்பை விட 4.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர் வாகன ஓட்டிகள் வெப்பத்தால் தவிக்கும் நிலை உள்ளது.

நேற்று மீனம்பாக்கத்தில் 99.86 டிகிரி(37.7டிகிரி செல்சியஸ்) பதிவாகி உள்ளது. இது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து மார்ச் மாதத்தில் பதிவான பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்றும்,கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகம் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழகத்தில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பறவை கூண்டுகளின் மேல் சாக்குபையால் போர்த்தி அடிக்கடி தண்ணீர் தெளிப்பது, மற்று விலங்குகள் உள்ள பகுதியில் குட்டைகளில் தண்ணீர் வற்றாமல் பார்த்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல், தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் விலங்குளுக்கு சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் அடிக்கடி வழங்கவும் முடிவு செய்து உள்ளனர். யானைக்கு ஷவர் குளிர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

புலிகள் நீந்தி குளிக்க தொட்டி , காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியல், அதன் இருப்பிடத்தை சுற்றி தண்ணீரை எப்பொழுதும் சேற்றுத்தன்மையுடன் வைக்கவும் ஏற்பாடு செய்து உள்ளனர். நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளின் மீது காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்படுகிறது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News