தமிழ்நாடு

இந்த மாதம் இறுதியில் தமிழக சட்டசபை கூடுகிறது

Published On 2024-11-03 05:07 GMT   |   Update On 2024-11-03 05:07 GMT
  • டிசம்பர் மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அறிவிப்பார்.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் கடைசி வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் அதன் மீதான விவாதம் 4 நாள் நடைபெற்றது.

இதன்பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதம் உடனே நடைபெறாமல் பாராளுமன்ற தேர்தலுக்காக தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் 2024-25-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் கடந்த ஜூன் 20-ந்தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது.

அப்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் அடங்கிய கூட்டம் ஜூலை 29-ந்தேதி வரை நடந்தது. வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். சபாநாயகர் அப்பாவு இப்போது ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். அவருடன் சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் சென்றுள்ளார். வருகிற 17-ந்தேதி தான் சென்னை திரும்புகின்றனர்.

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அறிவிப்பார். அநேகமாக இந்த மாதம் கடைசி வாரம் (நவம்பர்) சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதை பொருள் நடமாட்டம், மழை-வெள்ளம் சேதம், கூட்டணி விசயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும்.

2026 தேர்தலில் எநத கூட்டணி ஜெயிக்கும் என்ற வகையில் அமைச்சர்களின் பேச்சுக்கள் இருக்கும். ஆளும் கட்சி-எதிர்க்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

Similar News