தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை காலம் பாதி முடிந்தது- 18 மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்தது

Published On 2024-11-19 05:03 GMT   |   Update On 2024-11-19 05:03 GMT
  • இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.
  • சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழை மூலம் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விவசாயத்திற்கு பயன் அளிக்கும். இது தவிர சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளும் இதனை நம்பிதான் உள்ளன.

அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் என்றாலும் சில ஆண்டுகளில் ஜனவரி முதல் வாரம் வரை கூட மழை பெய்வது உண்டு.

இந்த வருடம் கடந்த மாதம் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் பருவமழை தொடங்கியதால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அதனை தொடர்ந்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த வாரம் உருவாகி மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்தது. இதனால் வட மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட மழை பொய்த்து போனது.

ஆனாலும் வங்க கடலில் தொடர்ந்து உருவாகி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், உள் மாவட்டங்கள் இயல்பை விட குறைந்த அளவில்தான் மழை பெய்து உள்ளது.

ஏரி-குளம் எதுவும் நிரம்பவில்லை. பருவமழை காலம் மத்திய பகுதிக்கு வந்து விட்ட நிலையில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்தடுத்து உருவாகாமல் தாமதம் ஆவதால் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை.

இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.

18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அங்கு 51 சதவீதம் மழை பற்றாக்குறையாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 41 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. காஞ்சிபுரத்தில் 35 சதவீதமும், நாகப்பட்டினம் 32 சதவீதமும் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

சென்னையை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் இயல்பை விட தற்போது வரை மழை குறைவாக பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை சராசரியாக 48 செ.மீ. பெய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி 3 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

இந்த வாரத்தில் சென்னை அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைவாகவும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் இறுதியில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News